×

66 கோடி தடுப்பூசி வாங்க ரூ.4,605 கோடி கூடுதல் விலை: சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு புதிய ஒப்பந்தம்

புதுடெல்லி: தற்போது ரூ.150க்கு வாங்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை முறையே ரூ.215.25, ரூ.225.75 என்ற விலைக்கு வாங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த புதிய விலையில் டிசம்பருக்குள் 66 கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. பழைய விலையின்படி 66 கோடி டோஸ் தடுப்பூசி வாங்க ரூ.9,900 கோடி செலவாகுகிறது. புதிய ஒப்பந்தத்தின்படி ரூ.14,505.74 கோடி செலவாகும். இதன் மூலம் ரூ.4605.74 கோடி கூடுதலாக கொடுத்து தடுப்பூசியை ஒன்றிய அரசு வாங்குகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்து பெருமளவில் மக்களுக்கு செலுத்தி வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்கள், 45-60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, மருந்து நிறுவனங்களுடன் 50% தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து வந்தது. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிய போது, அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையாசனது. அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

உச்ச நீதிமன்றமும் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 21ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஒன்றிய அரசு சார்பில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, மருந்து நிறுவனங்களிடம் இருந்து 75% ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்யும், 25% தனியார் மருந்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம், தடுப்பூசிக்கான ஜிஎஸ்டி.யையும் ஒன்றிய அரசே செலுத்தும்  என தெரிவிக்கப்பட்டது.

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை ஒரு டோஸ் ரூ.150 என்ற விலையில் ஒன்றிய அரசு தற்போது வாங்கி வருகிறது. இந்த விலையில் தொடர்ந்து கொடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, தடுப்பூசி உற்பத்தி விலையை உயர்ந்த ஒன்றிய அரசு பரிசீலினை செய்ய வேண்டும் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, மருந்து நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, தற்போது புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, கோவிஷீல்டு ஒரு தடுப்பூசி ரூ.205, கோவாக்சின் ரூ.215 (வரி இல்லாமல்) வாங்கப்படுகிறது. வரியுடன் சேர்ந்து கோவிஷீல்டு ரூ.215.25, கோவாக்சின் ரூ.225.75 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையில் கோவிஷீல்டு 37.5 கோடி டோசும், கோவாக்சின் 28.5 கோடி டோசும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டிசம்பருக்குள் வாங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒரு தடுப்பூசி ரூ.150 என்ற விலையில் 66 கோடி டோஸ் வாங்கினால் ரூ.9,900 கோடி செலவாகும். தற்போது போட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, 37.5 கோடி டோஸ் கோவிஷீல்டுக்கு ரூ.2,446.87 கோடியும், கோவாக்சினுக்கு ரூ.2158.87 கோடியும் அதிக விலை கொடுத்து ஒன்றிய அரசு வாங்குகிறது.

பழைய விலை ஒப்பிடுகையில் கோவிஷீடுக்கு ரூ.3,987 கோடியும், கோவாக்சினுக்கு ரூ.5,913 கோடியும் கூடுதல் செலவாகும். இரண்டு நிறுவனங்களிடம் இருந்து 66 கோடி டோஸ் வாங்க ரூ.14,505.87 கோடி தேவைப்படுகிறது. இதன்மூலம் ரூ.4,605.74 கோடி கூடுதலாக கொடுத்து ஒன்றிய அரசு தடுப்பூசியை வாங்குகிறது. வரும் டிசம்பருக்குள் நாட்டில் உள்ள தகுதியான அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என ஒன்றிய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 41.69 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : US government ,Serum ,Bharat Biotech , Vaccine, Extra Price, Serum, Bharat Biotech, Government of the United States
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்