காதல் திருமணம் செய்து ஏமாற்றிச் சென்ற கணவருக்கு தண்டனை பெற்றுதர 46 ஆண்டாக போராடும் மூதாட்டி: அயனாவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

பெரம்பூர்: காதலித்து திருமணம் செய்து தன்னை ஏமாற்றி அசிங்கப்படுத்திவிட்டு தலைமறைவாக இருக்கும் கணவருக்கு தண்டனை  பெற்றுதர 46 ஆண்டுகளாக மூதாட்டி போராடி வரும் சம்பவம்  அயனாவரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொளத்தூர் முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் இளவரசி (65). இவரும், விஜயகோபாலன் என்பவரும்  காதலித்து கடந்த 1975ம் ஆண்டு  பெங்களூரில் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சென்னைக்கு வந்து மயிலாப்பூர், வால்டாக்ஸ் ரோடு, கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து 7 மாதம் குடும்பம் நடத்தினர்.  பின்னர், தனக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி, விஜயகோபாலன் அங்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இளவரசிக்கு  பெண் குழந்தை பிறந்தது.  பல ஆண்டு ஆகியும் விஜயகோபாலன் திரும்பி வரவில்லை. இதனிடையே, 1985ம் ஆண்டு விஜயகோபாலன் வேறு பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக இளவரசிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அதே ஆண்டு இளவரசி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த சமயத்தில் விஜயகோபாலன் காவல் துறையில்  சேர்ந்து போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். புகார் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது, இளவரசியின் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை. குழந்தை என்னுடையது என  நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து,  2010ம் ஆண்டு நீதிமன்றத்தில்  இளவரசி வழக்கு தொடர்ந்தார். மேலும் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து விஜயகோபாலன்தான் தனது குழந்தையின் தந்தை என நிரூபிக்க போராடி வந்தார். இதைத்தொடர்ந்து 10 ஆண்டு கழித்து 2020ம் ஆண்டு இளவரசிக்கு பிறந்த தேவி என்ற பெண் குழந்தை  விஜயகோபாலனுக்கு பிறந்ததுதான் என டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு, கொரோனா தொற்று காரணமாக இளவரசி கொடுத்த புகார் மீது  நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, இளவரசி மீண்டும் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். பின்னர், என்னையும்  எனக்கு பிறந்த குழந்தையின் பிறப்பையும் காவல்நிலையத்தில் வைத்து தவறாக பேசிய விஜயகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலக அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார்.  புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகோபாலனை தேடி வருகின்றனர். தன்னை ஏமாற்றிவிட்டு தலைமறைவான கணவருக்கு தண்டனை  பெற்றுதர 46 ஆண்டுகளாக போராடி வரும் சம்பவம் அயனாவரம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>