அடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவிற்கு திட்டங்கள் கொண்டுவரப்படும் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை : செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது;

முதல்வரின் உத்தரவின்படி சென்னையில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சீராக வழங்கவேண்டும் என்பதற்காக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. மீஞ்சூர் மற்றும் வடநெம்மேலியில் 100 எம்.எல்.டி அளவிற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 1,100 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவிற்கு திட்டங்கள் கொண்டுவரப்படும். பாதாளசாக்கடை திட்டத்தை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றும் திட்டம் குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவெடுப்பார். விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக முதல்வர் அறிவித்துவிட்டார். இதேபோல், நகராட்சிகளில் வரும் புகார்களை சரிசெய்து இந்தாண்டு இறுதிக்குள் நகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சட்டமன்றத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories:

>