தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரீப் பருவத்தில் ஆடிப்பட்டத்திற்கு ஏற்ற பருவமழை தற்சமயம் பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, பாரூர் ஏரி, சின்னாறு அணை, பாம்பாறு அணை, தும்பலஅள்ளி, பஞ்சப்பள்ளி போன்ற நீராதாரங்களில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளது.

இதனால் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி வருகின்றனர். இதே போல் மானாவாரி ராகி, பயறு வகைகளான உளுந்து, காராமணி, பச்சைப் பயறு, துவரைப் பயிர்களுக்கான விதைகள், எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய விதைகளும், பருத்தி விதைகளும், காய்கறி விதைகளும் விவசாயிகள் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விதை பைகளில், சான்று அட்டை பெறப்பட்டும், முறையாக அச்சிடப்பட்டுள்ள விபர அட்டைகளில் 13 விபரங்கள் உள்ளடக்கியுள்ளதை உறுதி செய்து கொண்டு வாங்க வேண்டும்.

உற்பத்தியாளர் விபர அட்டை வெளிர் பச்சை வண்ணத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அதில் பயிர் ரகம், குவியல் எண், அறுவடை நாள், அட்டை பொருத்திய நாள், ஆய்வு செய்யப்பட்ட நாள், காலாவதி நாள், உற்பத்தியாளரின் முகவரி விவரம் அச்சிடப்பட்டு இருக்கும். விதைகளை வாங்கும் விவசாயிகள், அனைத்தையும் படித்து பார்த்து அல்லது விற்பனையாளரிடம் கேட்டறிந்து தரமான விதை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ரசீதில் விவசாயி மற்றும் விற்பனை ரசீது வழங்குபவரும் கையொப்பமிட வேண்டும். எனவே, தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை கேட்டு வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு விதை ஆய்வு துணை இயக்குநர் பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>