×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது புதுகை சந்தை ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புதுக்கோட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆட்டு சந்தை களைகட்டியது. ரூ.ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடு விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை சந்தை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில் ஆடு, மாடுகள் விற்பனை களை கட்டும். புதுக்கோட்டை மட்டும் அல்லாது திருச்சி, தஞ்சை உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து செல்வர். மேலும் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். கொரோனா ஆரம்பித்ததில் இருந்து சந்தையில் விற்பனை தடைபட்டு வியாபாரம் மந்தம் அடைந்தது. தற்போது அரசு பல தளர்வுகளை அறிவித்ததால் மீண்டும் சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 21ம் தேதி பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆட்டு சந்தைகளில் கூட்டம் களை கட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை சந்தப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கால்நடை வளர்ப்பவர்கள் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் கூடினர். இதனையடுத்து நகராட்சி சந்தை நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆட்டுச் சந்தையில் ரூ.5,000 முதல் 20,000 வரை ஆடுகளின் விற்பனை நடைபெற்றது. எடைக்கு ஏற்ப விலை நிர்ணயித்து விற்பனை நடந்து வருவதாகவும் வழக்கத்தை விட ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை ஒரு ஆட்டிற்கு விலை அதிகரித்து இருந்தது. நேற்று நடைபெறும் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.

Tags : Budugai market , Goats sold for Rs 1 crore in Budugai market
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...