திருமூர்த்திமலை அணையில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு

உடுமலை: சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடைய செய்வதற்காக உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் உள்ள அணைப்பகுதியில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் மெகா தொட்டி என்றழைக்கப்படும் திருமூர்த்தி அணை உள்ளது. மலை மீது 900 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் ஒன்றாக கருவறையில் குடியிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இது தவிர திருமூர்த்தி அணை பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம்,விளையாட்டு பூங்காஎன பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அணைப்பகுதிகளில் உள்ளஅணை பூங்காக்களை மேம்படுத்தி சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மீது உள்ள திருமூர்த்திஅணை மற்றும் பூங்காவினை திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் அரசு துறை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று ஆய்வு செய்தார். திருமூர்த்திமலை அணைப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது.

திருமூர்த்தி மலை அணைப்பகுதியை ஒட்டிய 2700 மீட்டர் நீளம் கொண்ட பொதுப்பணித்துறை நிலத்தில் ஒரு அழகிய அணைப் பூங்கா அமைப்பதற்கான திட்ட கருத்துரு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மீண்டும் செயல்படுத்துவதற்கான ஆலோசனை திருமூர்த்தி மலை அணையின் கோட்ட செயற் பொறியாளர் திருமூர்த்தி, மற்றும் செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் சண்முகம் ஆகியோருடன் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அரசின் கவனத்திற்கு இந்த திட்டத்தை கொண்டு சென்று நிதியுதவி பெற்று சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அழகிய அணை பூங்கா அமைத்திட சுற்றுலாத்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் செல்வராஜ்,சுற்றுலா ஆர்வலர்கள் சண்முகராஜ்,ஜவஹர்,பிரசாந்த்,பாலாஜி மற்றும் பொன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>