×

தைரியமானவர்கள் வாருங்கள் பாஜ.வுக்கு பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம்: ராகுல் அதிரடி

புதுடெல்லி: ‘உண்மையை எதிர்கொள்ள, பாஜவுக்கு பயப்படுபவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம். அதே சமயம், தைரியமானவர்கள் கட்சியில் இணைக்கப்பட வேண்டும்,’ என ராகுல் காந்தி கூறி உள்ளார். சமீபகாலமாக காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து விலகி பாஜவுக்கு தாவி வருகின்றனர். அவர்களில் ஜோதிராதித்யா சிந்தியா, ஜிதின் பிரசாதா, நாராயணன் ரானே போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் சிந்தியா, ரானே ஆகியோர் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சராக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல் முறையாக கட்சியின் சமூக வலைதளப் பிரிவு தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். சுமார் 3500 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது:

உண்மையை எதிர்கொள்ள பயப்படுபவர்கள், பாஜ.வுக்கு பயப்படுபவர்கள் கட்சியை விட்டு விலகுகிறார்கள். உதாரணத்திற்கு சிந்தியா போன்றவர்களை சொல்லலாம். சிந்தியா தனது வீட்டை பாதுகாக்க, பயந்து போய், ஆர்எஸ்எஸ்.சில் சேர்ந்துள்ளார். அவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ்.காரர்கள். அவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம், அவர்களை நாங்கள் விரும்பவில்லை, எங்களுக்கு அவர்கள் தேவையும் இல்லை.எங்களுக்கு தேவை தைரியமானவர்கள். இதுவே எங்கள் சித்தாந்தம். தைரியமான பலர் காங்கிரசுக்கு வெளியில் இருக்கின்றனர். அவர்கள் நம்மவர்கள். அப்படிப்பட்ட தைரியமானவர்களை கட்சிக்குள் அழைத்து வாருங்கள். இதுதான் உங்களுக்கான எனது அடிப்படை செய்தி.எதற்கும் பயப்படாதீர்கள். அனைவருக்கும் சம உரிமையை வழங்குவதுதான் காங்கிரசின் கொள்கை. ஆனால், குறிப்பிட்ட சிலருக்கு ஆதாரம் தர விரும்புவதுதான் ஆர்எஸ்எஸ். இவ்வாறு ராகுல் கூறினார்.

பிரியங்கா மவுன போராட்டம்
உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் சந்திக்கிறது. கொரோனா 2வது அலையை இம்மாநில முதல்வர் யோகி சிறப்பாக கையாண்டதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டினார். இதை கடுமையாக கண்டித்த பிரியங்கா, ‘மோடியின் நற்்சான்றால் யோகி செய்த கொடுமைகளை மறைத்து விட முடியாது,’ என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து,  2 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்ற அவர், யோகி அரசை கண்டித்து ஹஸ்ரத்கன்ஜ் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பாக அமர்ந்து மவுனப் போராட்டம் நடத்தினார்.

சோனியாவுடன் சித்து சந்திப்பு
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங், முன்னாள் அமைச்சர் சித்து இடையே அதிகரித்து வரும் உட்கட்சி பூசலுக்கு தீர்வு காண, சித்துவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்நிலையில், திடீரென டெல்லி வந்த சித்து, சோனியாவை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ஆகியோர் உடன் இருந்தனர்.

இனி சீரியஸ் மட்டுமல்ல...
டிவிட்டரில் பொதுவாக ராகுல் ஒன்றிய அரசை விமர்சித்து டிவிட்களை பதிவிடுவார். புள்ளிவிவரங்கள், அரசுக்கு எதிராக செய்திகளை டேக் செய்வார். அல்லது இரங்கல் தெரிவிப்பார். ஆனால், நேற்று முதல் முறையாக, ‘நீங்கள் இப்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் யோசிக்கிறேன்?’ என டிவிட் செய்துள்ளார். எனவே, இனி டிவிட்டரில் சீரியசான விஷயங்கள் மட்டுமல்ல, சாதாரணமான சேட்டிங், ராகுல் படித்த புத்தகங்கள் என அரசியலை தாண்டி நெட்டிசன்களுடன் ஒரு நெருக்கத்தை ராகுல் ஏற்படுத்துவார் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.


Tags : baja ,Rahul , Courage, BJP. Party, Rahul
× RELATED நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக...