மதுரை எய்ம்ஸில் இந்த ஆண்டு 50 மருத்துவ சீட்டுகள் ஒதுக்கீடு: நிர்வாகக்குழுவின் முதல் கூட்டத்தில் தகவல்

திருப்பரங்குன்றம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், இணைச்செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ வல்லுனர்கள், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், தேனி எம்பி ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர்சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்டிட பணிகள், நிதி, மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி, ‘‘இந்தியாவில் 16வது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை, தோப்பூரில் அமைய உள்ளது. இதற்கான பணிகள் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறுவனத்தின் மூலம் நடைபெற உள்ளது. ரூ.1,978 கோடியில் இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் 2023ம் ஆண்டு துவக்கப்பட்டு 2026ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 2021-22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்த ஆண்டு 50 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டிட பணிகள் துவங்காத நிலையில் மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு, ஆய்வகம் மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு ஒரு மாத காலத்திற்குள் செய்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதலமைச்சர் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளதால் அவரது உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகளை செய்து தருவோம் என கூறினார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 180 மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் என 130 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்’’ என்றார்.

Related Stories:

>