கனமழையால் வெள்ளப்பெருக்கு ஜெர்மனி, பெல்ஜியத்தில் 120 பேர் பரிதாப பலி

பெர்லின்:  ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கினால் 120க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறி வருகிறது. பல  இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களில் பாய்ந்து நாசம் செய்துள்ளது. ரைன்லேண்ட்- பாலடினேட்டை மாகாணங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 மாற்றுத் திறனாளிகள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் தான் பெரும்பாலானவர்கள் உயிர் இழந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி ஏராளமான வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளில் சிக்கி தவித்த நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல், வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியாவில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் 1,300 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், அது தவறான தகவல்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடுகளில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாததும், சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதுமே இந்த தவறான கணக்குக்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோல், பெல்ஜியத்திலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. எல்லை பகுதிகள் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நீர்மட்டம் உயர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறாமல் தவித்து வருபவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர். இதனிடையே இத்தாலியில் இருந்து மீட்பு குழுவினர் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். லிம்பர்க்கும் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய ஆற்றின் கரைகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்திலும் ஏராளமான ஆறுகள் மற்றும் ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறிய பாலங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

Related Stories: