×

தினசரி தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த ‘4-டி’யை பின்பற்றுங்கள்: 6 மாநிலங்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் மோடி பேசியதாவது: கொரோனா தொற்று 3வது அலை எழக்கூடும் என்ற கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் நாம் தற்போது இருந்து வருகிறோம். நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 80 சதவீதம் தொற்று பாதிப்பு உங்கள் 6 மாநிலங்களில்தான் உள்ளது. இதேபோன்ற ஒரு சூழலை கொரோனா 2வது அலைக்கு முன்னதாக கடந்த ஜனவரியில் சந்தித்தோம். எனவே, கவனமாக இருப்பது அவசியம். 3வது அலை எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு தினசரி அதிக தொற்று உள்ள மாநிலங்கள் அதனை கட்டுப்படுத்த  தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோதனை செய்தல், பின்தொடர்தல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல் ஆகிய ‘4 டி’ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 3வது அலையை எதிர்கொள்ள, ஒன்றிய அரசு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவ உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த, மாநிலங்கள் இதில் இருந்து நிதியுதவியை பெறலாம். கொரோனா தொற்று பாதிப்பு சில இடங்களில் குறைந்து இருந்தாலும் கூட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  இவ்வாறு மோடி பேசினார்.

டீ விற்ற ரயில் நிலையத்தை நவீனமயமாக்கினார் மோடி
குஜராத்தில் விமான நிலையத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட காந்தி நகர் ரயில் நிலையம் உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகளை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்ட ஐந்து நட்சத்திர ஓட்டலையும் திறந்து வைத்தார். காந்திநகர் -வாரணாசி வாராந்திர விரைவு ரயில் மற்றும் காந்திநகர் வரேதா ரயிலையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் நிலையத்தில்தான் பிரதமர் மோடி தனது சிறு வயதில் டீக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi , Corona, 3rd wave, Modi, CM
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...