×

காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு ஆட்டோவில் சென்ற ரவுடியை வெட்டிக்கொன்ற 7 பேர் கும்பல்: மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: வழக்கு ஒன்றில் காவல் நிலையத்தில் ஆஜராகி ரவுடிகள் கையெழுத்து போட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற போது, 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியதில் ஒரு ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (எ) கிளி ராஜேஷ் (32). ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மெரினா, ஜாம்பஜார், ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே வழக்கு ஒன்றில் மெரினா போலீசார் கடந்த மாதம் கிளி ராஜேஷ் மற்றும் அவரது நண்பரான ஜான்சன்(31) ஆகியோரை கைது செய்தனர். பிறகு இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி ரவுடிகளான கிளி ராஜேஷ், ஜான்சன் ஆகியோர் தினமும் ெமரினா காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகின்றனர். 


 நேற்று காலை 10.30 மணி அளவில் ராஜேஷ், ஜான்சன் மெரினா காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே ஆட்டோ வரும்போது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆட்டோவை வழிமறித்து உள்ளேயிருந்த ரவுடிகள் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி கிளி ராஜேஷ் துடிதுடித்து உயிரிழந்தார். மற்றொரு ரவுடியான ஜான்சன் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.தகவல் அறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த ரவுடி ஜான்சனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ரவுடி ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை குறித்து மெரினா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்தது தெரியவந்துள்ளது. மெரினா காமராஜர் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து 7 பேர் கும்பலை போலீசார் தேடி வந்தனர். 


இந்நிலையில் ரவுடி கிளி ராஜேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளில் எழுமலை (25), காட்டான் (எ) காத்தவராயன் (30), லோகேஷ் (32), அருண்குமார் (28), வீரா (29) ஆகிய 5 பேரை 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள 2 குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.



Tags : Rowdy , At the police station, auto, rowdy, cut off
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...