தமிழக பாஜ புதிய தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை

சென்னை:  தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சரானார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 8ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர், சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், மாயசக்தி, வர்த்தக பிரிவு மாநில செயலாளர் செல்வகுமார்,  ராஜ சிம்ம மகேந்திரா (எ) அஷ்வின் உள்ளிட்ட தலைவர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

 தொடர்ந்து அண்ணாமலை அளித்த பேட்டி: நீட் தேர்வு வந்த பிறகு தான் பணமில்லாத ஏழை மாணவர்களும் மருத்துவ கல்வி பயில முடிகிறது. இதுவே உண்மையான சமூகநீதி. எதற்காக நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.  நீட் தேர்வு நல்லது என்று அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் எடுத்துரைப்போம். தமிழகத்திற்கான ஒதுக்கீட்டு அளவையும் தாண்டி அதிகளவு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம்.  ராசிபுரத்தில் நான் பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ளது. ஐடி சட்டம் பற்றி நான் பேசியதை  ஊடகம் பற்றி பேசியதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ேமகதாது அணையை கட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். தமிழ மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>