இரண்டாவது முறையாக டெல்லி பயணம் ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திப்பு: நீட் தேர்வு, மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முறையீடு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். அங்கு, ஜனாதிபதியை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்று கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார்.  பிரதமர் மோடி, கொரோனா 3வது அலை தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, பிரதமர்  இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.  மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அதன்படி, நாளை (18ம் தேதி) பிற்பகல் சென்னையில் இருந்து முதல்வர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். நாளை இரவு டெல்லியிலேயே தங்குகிறார். இதையடுத்து 19ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். 

டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்கும்போது, ‘‘தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பாதித்து வருகிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செயல்படவில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் நீட் தேர்வு எழுதினாலும் அவர்களால் அதி மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.  டெல்லியில்  பிரதமர் மோடியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும், இந்த சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளதால், தமிழக எம்பிக்கள் அனைவரும் அன்றைய தினம் டெல்லியில்தான் இருப்பார்கள். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேகதாது பிரச்னை குறித்து பிரதமரை சந்தித்தால், தமிழக எம்பிக்கள் அனைவரும் அவருடன் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

 முக்கியமாக இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது எனவும், அதனால் ஏற்படும்  பாதிப்புகள் குறித்தும் நேரில் வலியுறுத்துவார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.  தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் 17ம் தேதி டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் பல முக்கிய கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார். அப்போதும் மேகதாது அணை குறித்து விளக்கி, கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட அறிவுறுத்தும்படி பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.  இந்த நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி சென்று, 19ம் தேதி ஜனாதிபதி, பிரதமரை பார்த்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

Related Stories: