பொன்னேரி, குன்றத்தூர், திருக்குழுக்குன்றம், கூடுவாஞ்சேரி உட்பட 33 சிறப்பு பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு?: தமிழக அரசு ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்குழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி உள்பட 33 சிறப்பு பேரூராட்சிகளை 2ம் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட அந்த பேரூராட்சியில் 30 ஆயிரம் அல்லது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவ்வாறு 33 சிறப்பு பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை பெற்றிருப்பதால் அந்த பேரூராட்சிகள் அனைத்தையும் நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்குழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கடலூர் மாவட்டத்தில் வடலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோழிங்கர், விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, தாரமங்கலம், இடங்கனசாலை, கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை-கருமாண்டி, செல்லிபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி, அவினாசி, கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமாத்தம்பட்டி, மதுக்கரை, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, தஞ்சை மாவட்டத்தில் அதிராமபட்டினம், தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், நெல்லை மாவட்டத்தில் களக்காடு, பணகுடி, வடக்கு வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளங்கோடு ஆகிய 33 சிறப்பு பேரூராட்சிகள், 2ம் நிலை நகராட்சிகளாக வருவாய் அடிப்படையில் தரம் உயர்த்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது அரசு உத்தரவு மூலம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே அம்பை, வி.கே.புரம் ஆகியவை நகராட்சிகளாக உள்ள நிலையில் தற்போது களக்காடு, பணகுடி, வடக்கு வள்ளியூர் ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதால் நகராட்சிகளின் எண்ணிக்கை 5 ஆக உயரும். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, காயல்பட்டினம் ஆகியவை நகராட்சிகளாக உள்ள நிலையில் திருச்செந்தூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால் நகராட்சிகளின் எண்ணிக்கை மூன்றாக உயரும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 2 மாதங்களுக்குள் சிறப்பு பேரூராட்சிகள் 2ம் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக வெளியாகிய செய்தியால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>