×

புதுவையில் திடீரென உள்வாங்கிய கடல்: சுனாமி பேரிடர் அறிகுறியா?

புதுச்சேரி: புதுச்சேரியில் துறைமுகம் அமைத்த பிறகு கடல் அரிப்பு ஏற்படவே கடற்கரையில் மணல்பரப்பு காணாமல் போனது. இதனிடையே கடல் பகுதி கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு மாறாக காணப்படுகிறது. 100 அடி தூரம் வரை கடல் திடீரென உள்வாங்கியுள்ளது. குறிப்பாக காந்தி சிலை பின்புறம் முதல் பழைய துறைமுகம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணல் பரப்பு அதிகளவில் தென்பட்டது. இன்றும் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டன. இதை கடற்கரைக்கு வந்த மக்கள் பார்த்து வியப்படைந்தனர். அதேவேளையில் மீனவ கிராமங்களுக்கு இது சுனாமிக்கான அறிகுறியோ என்ற அச்சமும் எழுந்தது.

இதுகுறித்து கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டபோது, ஆழ்கடலில் நில அடுக்குகள் நகர்ந்து கடல் உள்வாங்கி இருக்கலாம். கடல் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு அதன் காரணமாகவும் உள்வாங்கியிருக்கலாம். இயற்கைக்கு மாறாக கடலில் ஏதோ நடந்துள்ளதையே இவை சுட்டிக் காட்டுகின்றன. எனவே இதற்கான காரணத்தை ஆராய வேண்டியது அவசியமென தெரிவித்தனர்.

இதனிடையே புதுச்சேரி கடல் பகுதிகளில் சில நாட்களாக டால்பின்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதை காண முடிகிறது. காலை, மாலை நேரங்களில் அவை கடலில் துள்ளி குளிப்பதை பொதுமக்கள் பார்த்து அதிசயிக்கின்றனர். குறிப்பாக பாண்டி மெரீனா கடற்கரை பகுதிகளில் டால்மீன்களின் துள்ளலை அதிகளவில் பார்க்க முடிவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Tags : Puduvai , PUDHUCHERRY , SEA
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...