×

நாகர்கோவில் மாநகரில் பல்லாங்குழிகளாக காட்சி தரும் நெடுஞ்சாலைகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பது, பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக  தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணிகளால் முக்கிய சாலைகள் சிதலமடைந்து கிடக்கின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மாநகரின் முக்கிய தெருக்களும் அலங்கோலமான நிலையில் உள்ளன.

பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு, கற்கள் உடைந்து கிடக்கின்றன. பல தெருக்களில் உடைந்து போன குழாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறிய வண்ணம் உள்ளன. தெருக்கள் குண்டும் - குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ரூ.10 கோடிக்கு சாலை பணிகள் நடந்தன. ஆனால் இதில் பல சாலைகள் சேர்க்கப்பட வில்லை என கூறப்படுகிறது. அவ்வாறு சேர்க்கப்படாமல் உள்ள சாலைகளையும் இந்த பட்டியலில் சேர்த்து பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் வடசேரி பள்ளிவாசல், கிருஷ்ணன்கோவில் கிராம நிர்வாக அலுவலகம் போன்ற பகுதிகளில் சாலைகளில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்த சாலை பல மாதங்களாக இப்படி சிதலமடைந்து கிடக்கிறது. சமீபத்தில் ஜல்லி கொண்டு வந்து நிரப்பினர். ஆனால் மழை காரணமாக அதுவும் சேதமடைந்து தற்போது குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாமல் சிக்கி திணறுகின்றன.

நகரின் மைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை இப்படி சிதலமடைந்து கிடப்பது வாகன ஓட்டிகளை பெரும் அவதிக்குள்ளாகி உள்ளது. பலமுறை இந்த சாலைகளை சீரமைக்க கோரி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தும் கூட நிரந்தர தீர்வு கிடைக்க வில்லை என பொதுமக்கள் வேதனையுடன் கூறினர். இதே போல் மாநகர சாலைகள் நகரில் பல இடங்களில் ஒரு வருடமாக சிதலமடைந்த நிலையில் உள்ளன. வடசேரி, கிருஷ்ணன்கோவில் ஆறாட்டு ரோடு, ரத வீதிகள், சிபிஎச் ரோடு, அருகுவிளை, வாத்தியார்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் மோசமாக கிடக்கின்றன.

நாகர்கோவில் மீனாட்சிபுரம்  சாலையில் உள்ள மரண பள்ளங்களால், தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய ரோட்டிலும் திடீர் பள்ளம் உருவாகி கிடக்கிறது. இதனால் பைக்கில் வருபவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். நாகர்கோவில் தெருக்களில் பைக்கில் செல்பவர்கள் முதுகு வலி அவஸ்தையில் தான் சாலையை கடக்கிறார்கள். நகர சாலைகளா, நரக சாலைகளா என புலம்பியவாறு மக்கள் செல்கிறார்கள்.

Tags : Nagargo , Highways in Nagercoil: Motorists in dire straits
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...