ஒலிம்பியாட் செஸ் போட்டி; சிவகாசி மாணவர் தேர்வு: கிரீஸ் நாட்டிற்கு செல்கிறார்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாரிமுத்து (23). இவர் 75 சதவீதம் கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. சென்னை லயோலா கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கண் பார்வை குறைவுடையோருக்கான மாவட்ட, மாநில, தேசிய மற்றும் ஆசிய அளவிலான செஸ் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள், கோப்பைகளை பெற்றுள்ளார். மாநில சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு 63 நாடுகள் பங்கேற்று இணையதளம் மூலமாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான செஸ் போட்டியிலும், இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை வகித்து மாரிமுத்து விளையாடியுள்ளார்.

இவர் வரும் அக். 16ம் தேதி கிரீஸ் நாட்டில் நடக்க உள்ள பார்வையற்றோருக்கான ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ளார். தமிழகத்திலிருந்து இவர் ஒருவர் மட்டுமே இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர் மாரிமுத்து கூறுகையில், ‘‘பார்வை குறைபாடு இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து செஸ் விளையாட்டில் தீவிர பயிற்சி பெற்று பதக்கங்களை வென்றேன். தற்போது ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன்’’ என்றார்.

Related Stories:

>