×

‘குட்டி ஃபிரெண்டை ஏமாற்ற விரும்பவில்லை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறேன்’- ஜோகோவிச் பேட்டி

லண்டன்: ‘ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறேன். டோக்கியோவில் என்னுடைய குட்டி ஃபிரெண்ட் கவ்ஜிரோ என்னை எதிர்பார்த்து காத்திருப்பான். அவனை ஏமாற்ற விரும்பவில்லை’ என்று நம்பர் 1 டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் கூறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், இந்த ஆண்டு இதுவரை நடந்துள்ள 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். அடுத்து யு.எஸ்.கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறிவைத்து பயிற்சியில் உள்ள இவர், தற்போது டோக்கியோவில் இம்மாதம் 23ம் தேதி துவங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், நாட்டுக்காக ஆடவுள்ளதை உறுதி செய்திருக்கிறார்.

இது குறித்து இன்று காலை அவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘என்னுடைய குட்டி ஃபிரெண்ட் கவ்ஜிரோவை நான் ஏமாற்ற விரும்பவில்லை. டோக்கியோ செல்வதற்கு விமான டிக்கெட்டை புக் செய்து விட்டேன். டோக்கியோவில் என்னுடைய சகாக்களுடன் இணைந்து கொண்டு, டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க உள்ளேன். நாட்டுக்காக ஆடுவது மிகவும் பெருமையானது. எனது நாடும், நாட்டு மக்களும் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்தோஷப்படுத்துவது என்னுடைய கடமை’’ என்று தெரிவித்துள்ளார். டோக்கியோ நகரை சேர்ந்த 6 வயது சிறுவன் கவ்ஜிரோ, ஜோகோவிச்சின் மிகப் பெரிய ரசிகன். ஒருமுறை ஜோகோவிச் ஆடிய போட்டி ஒன்றை கவ்ஜிரோ பார்த்திருக்கிறான்.

அதன் பின்னர் அவ்வப்போது அவரை தொடர்பு கொண்டு பேசி வருகிறான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவனது 6வது பிறந்த நாளின் போது, வீடியோ காலில் அவனை அழைத்து, ஜோகோவிச் வாழ்த்து சொன்னார். தன்னுடைய டோக்கியோ வருகையை கவ்ஜிரோவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும் அவனை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் ஜோகோவிச், ட்வீட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Tags : Olympics' ,Djokovic , ‘I don’t want to disappoint my little friend, I am participating in the Olympics’ - Djokovic interview
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...