குஜராத் பழங்குடியின கிராமத்தில் கள்ளத்தொடர்பு மனைவிக்கு நூதன தண்டனை அளித்த உறவினர்கள்: அரை நிர்வாணமாக்கி கணவரை தோளில் சுமந்த கொடுமை

தஹோத்: குஜராத்தில் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவியை அரை நிர்வாணமாக்கி கணவரை தோளில் சுமக்கவைத்த விவகாரத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டம் கஜூரி என்ற பழங்குடியின கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவிக்கும் (23), அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை தினேஷ் கண்டித்துள்ளார். ஆனால், அவரது மனைவி அடிக்கடி கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்துவந்தார். இதனால் கோபமடைந்த தினேஷ், தனது மைத்துனர் மெஹுல் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பொதுவான இடத்தில் வைத்து அந்த பெண்ணின் சேலையை அவிழ்த்துவிட்டு அரை நிர்வாணமாக்கினர்.

பின்னர், அந்த பெண் வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததற்கு தண்டனையாக, அவரது கணவரை தோளில் சுமந்து செல்ல கட்டாயப்படுத்தினர். அதற்காக, உறவினர்கள் சிலர் அந்த பெண்ணை குச்சியால் தாக்கினர். வேறுவழியின்றி அந்த பெண், அரை நிர்வாண கோலத்துடன் தனது கணவரை அவரது தோளில் சுமந்து சென்றார். சிறிது தூரம் சென்றவுடன் கணவரை தூக்க முடியாமல் கீழே விட்டுவிட்டார். ஆனால், உறவினர்கள் ஒன்றுசேர்ந்து அந்த பெண்ணை மீண்டும் தாக்கி, அவரது கணவரை சுமந்து செல்ல கட்டாயப்படுத்தி தாக்கினர். இந்த சம்பவத்தை அங்குள்ள இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

அதையடுத்து தன்பூர் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தன்பூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் பி.எம்.படேல் கூறுகையில், ‘கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணை துன்புறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும்  சிலர், அடித்து துன்புறுத்துவது இந்த வீடியோயில் பதிவாகி உள்ளது. குற்றம்  சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆவர். அரை  நிர்வாணமாக்கப்பட்ட அந்த பெண்ணை, சில பெண்கள் துணியால் மறைக்க  முயற்சித்தனர், ஆனால் அங்கிருந்த ஆண்கள் சிலர் அவ்வாறு செய்வதை தடுத்து  நிறுத்துவதும் வீடியோவில் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உட்பட 18 பேரை கைது செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories:

>