×

லண்டனில் ஒரே நாளில் 42,302 பேருக்கு கொரோனா: இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடருக்கு புதிய சிக்கல்?

லண்டன்: விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக கவுண்டி சாம்பியன் ஷிப் லெவன் அணியுடன் வரும் 20ம் தேதி முதல் 3 நாள் பயிற்சி போட்டியில் ஆட உள்ளது. இதனிடையே  உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு 3 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் குடும்பத்துடன் விரும்பிய இடங்களை சுற்றிப்பார்த்தும் சிலர் ரசிகர்கள் அதிகம் திரண்ட மைதானங்களுக்கு சென்று விம்பிள்டன், யூரோ கால்பந்து  போட்டியை ரசித்தனர்.  

இந்நிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பயிற்சி உதவியாளர் தயானந்த் கரானிக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத்அருண், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, மாற்று வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் சஹாவுக்கு தொற்று அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பயிற்சி போட்டியில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக ஆட உள்ளார். இதனிடையே ரிஷப் பன்ட்டிற்கு ஆதரவாக முன்னாள் வீரர்கள் ஆர்.பி.சிங், சுரேஷ்ரெய்னா, ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவிட் 19 உடன் கையாளும் அனைவருக்கும் இது ஒரு கடினமான நேரம், எனவே தயவுசெய்து வீரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டாம். அவர்களுக்கு எங்கள் ஆதரவு தேவை, என தெரிவித்துள்ளனர். அண்மையில் இங்கிலாந்து வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீரர்களுக்கு கொரோனா தொற்றால், டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கவலை தெரிவித்துள்ளார். கோவிட் -19 தொடர்பான தனிமைச் சட்டங்களில் மாற்றம் என்பது காலத்தின் தேவை. இல்லையெனில் ஆஷஸ் தொடரும் பாதிக்கப்படலாம் என அஞ்சுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பரவில் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை நாட்டில் 42,302 பேருக்கு  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி 15ம் தேதிக்கு பின் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்றாகும். இதனால் டெஸ்ட் தொடர் முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : Corona ,London ,UK ,India , Corona for 42,302 in one day in London: New problem for England-India Test series?
× RELATED 4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன...