×

ஜம்முவில் மீண்டும் ‘ட்ரோன்’ தாக்குதல் முயற்சி?.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையில் நேற்றிரவு மற்றொரு ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி ஜம்மு விமானப்படை தளத்தின் தீவிரவாத அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில், இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். விசாரணையில், ஆர்.டி.எக்ஸ், நைட்ரேட் மற்றும் ஐ.இ.டி ஆகிய வெடிபொருட்கள் ட்ரோன் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக ட்ரோன்கள் எதிர்ப்பு அல்லது தடுப்பு கட்டமைப்புளை ராணுவம் செய்துள்ளது.

மேலும், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 8.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் ஹிரானகர் செக்டரில் 2 ட்ரோன்கள் பறந்ததை உள்ளூர் மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், மத்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். ராணுவ வீரர்கள், அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில ரவுண்டு சுட்டதை தொடர்ந்து, அந்த ட்ரோன் பின்வாங்கி சென்று மறைந்து விட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத நிலையில், ஜம்மு நகரில் முழு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, நகரின் டன்மார் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த மோதலில், இரண்டு தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த என்கவுண்டர் சம்பவத்தில் இரண்டு வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று முன்தினம் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் பாகிஸ்தான் லஷ்கர் தளபதி எஜாஸ் அல்லது அபு ஹுரைரா மற்றும் இரண்டு உள்ளூர் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jammu , Attempted drone strike in Jammu again? .. 2 militants shot dead
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...