×

மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கூறினார்: டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

புதுடெல்லி: மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கூறினார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது எனக் கோரி, டெல்லி வந்துள்ள தமிழக அனைத்துக் கட்சிகள் குழு ஒன்றிய அமைச்சரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தியது. கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

கடந்த 12ம் தேதி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ‘மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது’ என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,

தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவுத்தலைவர் பால் கனகராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தனர். அதிமுக சார்பில் கலந்துகொள்ளும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று காலை டெல்லி வந்தனர். இந்த குழு இன்று மதியம் 1 மணியளவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது, ‘மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு  உத்தேசித்துள்ள திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைக் கட்சிகள் குழு வலியுறுத்தியது. இந்நிலையில் டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள்;

தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணையை கட்டக் கூடாது என சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக ஒன்றிய அமைச்சரிடம் பேசினோம். மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் கர்நாடகாவுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் கூறினார். மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்க மாட்டோம். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்தினோம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தினோம். கீழ் பாசன மாநிலங்களிடம் அனுமதி இல்லை, எனவே காவிரி நீர் மேலாண்மை வாரிய ஒப்புதலும் தேவை அவையும் கொடுக்கப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்  என்று மத்திய அரசு இரட்டை நிலைப்படு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மேகதாது அணை கட்டுவது குறித்த அறிக்கை தயாரிக்க அனுமதித்ததே தவறு. அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தினை கையில் எடுத்துள்ளது.ஒன்றிய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

இதற்கிடையே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கவுள்ளார். அப்போது, மேகதாது அணைக்கான அனுமதி மற்றும் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட கர்நாடகா திட்ட தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Union Water Resources ,Minister ,Megha Dadu Dam ,Duraimurugan ,Delhi , Union Water Resources Minister says there is no possibility of building Megha Dadu Dam: Interview with Minister Duraimurugan in Delhi
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...