×

பசுமை ஹைட்ரஜன் , பசுமை அமோனியாவிலும் இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்கும்: ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் நம்பிக்கை

டெல்லி : இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த “ஆத்மநிர்பார் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், எரிசக்தி மாற்றத்தில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனைப் பொறுத்தவரை இந்தியா உலகளவில் மிக வேகமான விகிதத்தில் வளர்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பாரீசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு 21-ல், புதைப்படிவங்கள் அல்லாத எரிபொருள் ஆதார வளத்திலிருந்து, மின்சக்தி உற்பத்தியில் 40 விழுக்காட்டை இந்தியா உற்பத்தி செய்வதாக உறுதி அளித்துள்ளது என்று கூறிய ஆர்.கே.சிங், இதில் 38.5 விழுக்காட்டை ஏற்கனவே எட்டியிருப்பதாகவும், தற்போது நிறுவப்பட உள்ள திறனையும் சேர்த்தால் இது 48.5 விழுக்காட்டை அடையும் என்றும் கூறினார்.

2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் 450 ஜிகாவாட் இலக்கை எட்டுவதற்கு இந்தியா இலக்கு நிர்ணத்திருப்பதாகவும், வரும் ஆண்டுகளில் இத்துறையில் தொடர்ந்து நமது நாடு உலகத் தலைவராகத் திகழும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் இந்தியா ஏற்கனவே 200 ஜிகாவாட்  தேவையை எட்டியிருப்பதாக சிங் தெரிவித்தார். பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியாவிலும் இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags : India ,Union Minister ,RK Singh , ஆர்.கே.சிங்
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...