×

கொடைக்கானலில் அரசு கலை கல்லூரி அமைக்க இடம் ஆய்வு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடர வெளியூர்களுக்குதான் செல்ல வேண்டும். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், தங்களது மேற்படிப்பை படிக்காமலே விட்டு விடும் அவலநிலை ஏற்படுகிறது. அதேநேரம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரி இருப்பதால் மாணவிகள் தங்களது மேற்படிப்பை எளிதில் படித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகின்றனர். இதேபோல் மேற்படிப்பை தொடர மாணவர்களுக்கும் ஒரு அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுபற்றி கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார், திமுக வெற்றி பெற்ற உடன் கொடைக்கானலில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதனடிப்படையில் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி நேற்று கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன், திமுக நகர செயலாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் அரசு கலை கல்லூரி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 60 ஏக்கர் இடத்தை ஆய்வு செய்தனர். உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீதாலட்சுமி, உதவி இயக்குனர் ரமேஷ், கண்காணிப்பாளர் சரவணன், திமுக இளைஞரணி அமைப்பாளர் மாயக்கண்ணன், நகர அவைத்தலைவர் மரியஜெயந்தன் ஆகியோர் இருந்தனர். பின்னர் ஆர்டிஓ கூறுகையில், ‘கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாளான இன்று கொடைக்கானல் மலைப்பகுதி மாணவர்களின் உயர்கல்விக்காக அரசு கல்லூரி அமைக்க இந்த இடத்தை ஆய்வு செய்துள்ளோம். இதுபற்றி அரசுக்கு உரிய அறிக்கை அனுப்பப்படும். அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Tags : Government Arts College ,Kodaikanal , Site study to set up Government Arts College at Kodaikanal
× RELATED உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை...