நீலகிரியில் தொடர் மழையால் ஊட்டி -கூடலூர் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் நேற்று இரவு ஊட்டி - கூடலூர் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

 இதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்த போதிலும் ஊட்டி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது. நேற்று இரவு காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி-கூடலூர் சாலையில் பைக்காரா முதல் அனுமாபுரம் வரை நான்கு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊட்டி தீயணைப்புத் துறையினர் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். மரங்கள் விழுந்ததால் ஊட்டி-கூடலூர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், மஞ்சூர் - கிண்ணகொரை சாலையில் தாய்சோலை பகுதியில் மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று விடிய விடிய பெய்த மழையால் மஞ்சூர் அடுத்த கேரிங்டன் அருகே ராட்சத  மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த  நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் நஞ்சூண்டன் மற்றும் சாலைப்பணியாளர்கள் சம்பவ  இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், மஞ்சூர் கிண்ணக்கொரை  இடையே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்  மழையால் குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைகளில் நீர் வரத்து  அதிகரித்துள்ளது. ஊட்டியில் குளிர் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

நீலகிரியில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): ஊட்டி 9, நடுவட்டம் 41, கிளன்மார்கன் 64, குந்தா 13, அவலாஞ்சி 100, எமரால்டு 22, அப்பர்பவானி 73, குன்னூர் 3, கோத்தகிரி 7, கூடலூர் 13, பந்தலூர் 61.

கோயில், வீடு சேதம்

கூடலூர்,  பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் தேவாலாவில் மரம்  ஒன்று கோயில் மீது முறிந்து விழுந்தது. இதில் கோயில் சேதமானது. தேவாலா  பகுதியில் இருந்து அத்திக்குன்னா செல்லும் சாலையில் விழுந்த மரத்தை  தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.

தேவாலாவில் இருந்து வாளவயல்  வழியாக கரியசோலை செல்லும் சாலை பில்லுகடை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன்  மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மரப்பாலம் அட்டி குழி  பகுதியில் கனகராஜ் என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்ததால் வீட்டின்  மேற்கூரை சேதமடைந்தது. வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும்  ஏற்படவில்லை.

Related Stories:

>