×

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை

வேலூர் :வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் 3 இடங்களில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுடன்  நேற்று ஆய்வு செய்தார். கர்நாடகாவில் உருவாகும் பாலாறு ஆந்திரா, தமிழகத்தில் ஓடுகிறது. இதில் தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

பாலாற்றில் நீராதாரத்தை உயர்த்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். முதலில் இறைவன்காடு அருகே பாலாறு- கொட்டாறு பிரியும் இடத்தில் புதியதாக படுக்கை அணை அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பொய்கை கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் இடத்தையும், சேண்பாக்கம் அருகே பாலாற்றின் குறுக்கே தரைகீழ் தடுப்பணை அமைக்கும் இடத்தையும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது: பாலாறு நதியானது கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்திலுள்ள நந்திதுர்கா மலையிலிருந்து உருவாகிறது.

பாலாறு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 127 கிலோ மீட்டர் தூரம் பாய்கிறது. அணைக்கட்டு தாலுகா இறைவன்காடு கிராமம் அருகே பாலாறு நதியானது கொட்டாறு மற்றும் பாலாறு என இரண்டாக பிரிந்து 7 கிலோமீட்டார் சென்று பின்னர் மீண்டும் ஒன்றாக இணைகிறது. கடந்த பல ஆண்டுகளாக பாலாற்றில் நீர் வரும் போது கொட்டாற்றில் செல்லாமல் பாலாறு வழியாக மட்டும் சென்று விடுவதாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

தற்போது ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாலாறு- கொட்டாறு பிரியுமிடத்தில் படுக்கை அணை அமைத்து இரண்டு ஆறுகளிலும் நீர் ெசல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் படுக்கை அணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மதிமான செறிவூட்டும் மண்டலத்தில் அமைந்துள்ளது. மேலும் ஆற்றின் இடதுகரை கே.வி.குப்பம் குறுவட்டம் மற்றும் வலதுகரை பள்ளிகொண்டா குறுவட்டம் ஆகிய இரண்டும் அதிக நீர் பயன்பாடு பகுதி என நில நீர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பொய்கை கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்காக கோரிக்கை சட்டமன்ற வினா மூலம் பெறப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. தடுப்பணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பொய்கை கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே பாலாறு வடிநில பகுதியில் சென்னை- பெங்களூர் சாலைக்கு வலதுபுறமாக பொய்கை கிராமத்தின் வழியாக செல்லும் சாலையில் 1.50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரா- தமிழக எல்லையிலிருந்து 69 கி.மீ தொலைவில் அமைய உள்ளது.

இந்த இடம் மிதமான செறிவூட்டும் மண்டலத்தில் அமைந்துள்ளது. மேலும் வலது கரையாகிய பள்ளிகொண்டா குறுவட்டம் மற்றும் இடது கரையாகிய வடுகந்தாங்கல் குறுவட்டம் அதிக நீர் பயன்பாடுபகுதி என நிலநீர் வைக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் நீளம் 200 மீட்டர் மற்றும் உயரம் 1.50 மீட்டர் ஆகும். இப்பணி செயலாக்கத்தால் தடுப்பணையை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பகுதியின் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இந்த திட்டம் மூலம் பொய்கை மற்றும் கொத்தமங்கலம் கிராமங்கள் பயன்பெறும்.

இதேபோல் சேண்பாக்கம் அருகே பாலாற்றின் குறுக்கே தரைகீழ் தடுப்பணை அமைக்கும் பணிக்காக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரை கீழ்தடுப்பணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பாலாற்றின் குறுக்கே பாலாறு வடிநிலபகுதியில் வேலூர் நகரத்தில் இருந்து சென்னை- பெங்களூர் தேசியநெடுஞ்சாலையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் வலதுபுறமாக சேண்பாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் சாலையில் ஒரு கி.மீ தொலைவில் பாலாற்றின் வலதுகரை அமைந்துள்ளது. இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லையிலிருந்து 77 கி.மீ ஆகும்.

 இந்த இடம்  மிதமான செறிவூட்டும் மண்டலத்தில் அமைந்துள்ளது. மேலும் இடதுகரையாகிய காட்பாடி குறுவட்டம் மற்றும் வலது கரையாகிய சத்துவாச்சாரி குறுவட்டம் அதிக நீர் பயன்பாட்டு பகுதியாகும். இந்த தரைகீழ் தடுப்பணையின் நீளம் 675 மீட்டர் ஆகும். இதனால் வேலூர், சேண்பாக்கம், கருகம்புதூர், விருதம்பட்டு, டி.கே.புரம் ஆகிய கிராமங்கள் நிலத்தடி நீர் செறிவூட்டும் முறையில் பயன்பெறும். தற்போது இத்திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இத்திட்டத்தின் வடிவமைப்பு வரைபடங்கள் பெறப்பட்ட அளவுகள் எடுக்கப்பட்டு தேவையான தளவிவரங்கள் வடிவமைப்பு வட்டத்தை சென்னை தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், குமாரன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் அம்ரீஷ், பாலாஜி, கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Balat ,Vallur , Vellore, Dams, Tn government, palaru
× RELATED பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய...