×

அமிர்தி அருகே கடந்த வாரம் பலத்த மழையின்போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சாலை தற்காலிகமாக சீரமைப்பு

*வனத்துறையினர் நடவடிக்கை

வேலூர் : அமிர்தி அருகே கடந்த வாரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சாலையை தற்காலிகமாக வனத்துறையினர் சீரமைத்து வருகின்றனர். வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ளது ஜவ்வாதுமலை. இங்கு நம்மியம்பட்டு, நெக்கினி, கொலையம், பாலாம்பட்டு, அமிர்தி உள்பட 8க்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், சுற்றுலாதலமான அமிர்தி மிருக காட்சி சாலையும் உள்ளது.

இவற்றிற்கு செல்ல முக்கிய பாதையாக இருந்துவந்த சாலையில் நாகநதி காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு நிவர் புயலின்போது சேதமானது. இதனால் அங்கு உயர்மட்ட மேம்பாலம் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினரால் கட்டப்பட்டு வருகிறது. அதுவரை பொதுமக்கள் ஆற்றை கடக்க தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் கடந்த வாரம் பெய்த கனமழையால் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டு இந்த தற்காலிக சாலை முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அமிர்தி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் இந்த சாலையில் மலை கிராம மக்கள் சென்றுவருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Amirthi , Vellore, Amrithi,Forest Department, Damaged Road, Road temporary alignment