×

ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏறும்போது கொரோனா இறங்கியிருக்க வேண்டும் : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி : கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் 3வது அலை குறித்து எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சீராய்வு கூட்டம் நடைபெற்றது. அம்மாநில துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சீராய்வு கூட்டத்தில் பேசிய அவர், புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் செய்தி கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

எனவே ஒவ்வொரு நிமிடமும் மிகவும் கவனமாகவும் எச்சரியுடனும் செயல்பட வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவசியமின்றி குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை பெற்றோர்கள் தடுக்கும் வகையில் அவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு விட கூடாது என்ற காரணத்தினால் தான் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனாவை பரவலை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் வகுப்பதற்கும் அவற்றை முன்னெடுப்பதற்குமான  வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இந்த சீராய்வு கூட்டம் உதவிடும் என்று தமிழிசை தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏறும்போது கொரோனா இறங்கியிருக்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.


Tags : Puducherry ,Deputy Governor , புதுச்சேரி துணைநிலை
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...