×

உலகை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ம் ஆண்டு நினைவு தினம்!: பள்ளி முன் அஞ்சலி செலுத்திய பெற்றோர்கள்..!!

தஞ்சை: கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்ததன் 17ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் சத்துணவு சமையல் அறையில் ஏற்பட்ட தீ மேற்கூரையில் பற்றியதில் பள்ளி குழந்தைகள் 94 பேர் பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தனர். 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து நாட்டையே உலுக்கியது. அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால் தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர். இந்த துயர நிகழ்வின் 17ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டும் பள்ளி முன்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டும் பள்ளி முன்பாக மட்டும் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது. பள்ளியின் முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு, உறவினர்கள், தீ விபத்தின்போது படித்த மாணவர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags : Kumbakonam school fire , Kumbakonam School, Fire, Remembrance Day, Parents, Tribute
× RELATED 94 பிஞ்சுக் குழந்தைகளை பலி கொண்ட...