அடையாறு திருவிக பாலம் அருகே ஆயில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சென்னை: மேடவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் ஆயிலை ஏற்றிக்கொண்டு நேற்று  முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு அடையாறு துர்கா பாய் தேஷ்முக் சாலையில் டேங்கர் லாரி ஒன்று வந்தது. அடையாறு திருவிக பாலத்தை கடந்து, வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கரில் இருந்த ஆயில் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. லாரியில் சிக்கி ஓட்டுனர் ராம்லால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் ஓட்டுனரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், ராட்சத கிரேன் மூலம் லாரியை அகற்றினர். சாலையில் பரவிய ஆயிலை துப்புரவு தொழிலாளர்கள் உதவியுடன் அகற்றினர். இதனால் அப்பகுதியில் நேற்று அதிகாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுனர் மது அருந்தி இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது போலீசார் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>