ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த வகை பொருந்தாதவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

சென்னை: சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி சக்ரவர்த்தி (40), சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த மாதம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். வழக்கமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு, சிறுநீரக தானம் அளிப்பவர், நோயாளியின் ரத்தம் சம்மந்தம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் ஒரே ரத்த வகை உள்ளவராகவும் இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் ஒரே ரத்த வகை உள்ளவர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. 

அதேபோல் தான் சக்கரவத்தியும், அவரது மனைவியும் வெவ்வேறு ரத்த வகை உடையவர்கள். இருந்தாலும், அவரது மனைவி சிறுநீரகத்தை தானாக முன்வந்து கொடுத்ததால் மருத்துவ உலகின் சாதனையாக கருதப்படும், ரத்த வகை பொருந்தாத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை சக்ரவத்திக்கு கடந்த 13ம் தேதி வெற்றிகரமாக செய்யப்பட்டது. 

இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மணி கூறியதாவது: மருத்துவ உலகின் சாதனையாக கருதப்படும்  ரத்தவகை பொருந்தாத நபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து  ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.  தற்போது அவருக்கு சிறுநீரகம் சிறப்பாக செயல்படுகிறது உடல்நலத்துடன் அவரும், அவருடைய மனைவியும் நன்றாக இருக்கிறார்கள். மேலும் இந்த சிகிச்சைக்கு குறைந்தது ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, என்றார். 

Related Stories:

>