×

கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் அதிமுக ஆட்சியில் ₹9 ஆயிரம் கோடி முறைகேடு: தமிழக அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் ₹9 ஆயிரம்கோடி  முறைகேடு புகார்  குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் மாணிக்காபுரம், புதூரை சேர்ந்த விஸ்வலிங்கசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2018ம் ஆண்டு  நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலின் போது, திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட  விண்ணப்பித்தேன். ஆனால், தேர்தல் நடத்தாமலேயே சட்டவிரோதமாக வேறொருவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் 95 சதவீத கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளே தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டனர். 5 சதவீத சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்பட்டது.


 கூட்டுறவு சங்கங்களில் சுமார் ₹9 ஆயிரம் கோடி அளவிற்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளே தலைவர்களாக இருந்ததால்  தங்களுடைய பினாமிகளுக்கே கடன் வழங்கினர். போலி ஆவணங்கள் மூலம் பினாமிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தான் அதிக பலன் அடைந்தனர். தற்போது தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள கூட்டுறவு சங்க பயிர்கடன், நகை கடன் தள்ளுபடி ₹11,500 கோடியில் அதிமுகவை சேர்ந்தவர்களே  பயன்பெற்றுள்ளனர். 75 சதவீத பயனாளர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள்தான் உண்மையான ஏழை விவசாயிகள் தள்ளுபடி பலனை பெறவில்லை. எனவே, இது மோசடி குறித்து உரிய விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிட  வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.



Tags : AIADMK ,ICC , In Co-operative Societies, Credit, AIADMK Government, Government of Tamil Nadu, Icord
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...