×

இந்தியாவுக்கு தனியாக தேசிய மொழி கிடையாது: ஆர்டிஐ கேள்விக்கு ஒன்றிய அலுவல் மொழிகள் துறை பதில்

மதுரை: இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசிய மொழி எதுவும் கிடையாது என ஒன்றிய அலுவல் மொழிகள் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ஒன்றிய அரசிடம் ஆங்கிலத்தில்  கேள்வி கேட்டால், அதற்கு இந்தியிலேயே பதில்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தென்காசி மாவட்டம் சமூக ஆர்வலர் பாண்டியராஜாவிற்கு, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, சில வடமாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர். இதுபோன்று மேலும், சிலரது கேள்விகளுக்கு இதே முறையில் பதில் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா இந்திய மொழிகள் சம்பந்தமாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். உள்துறை அமைச்சகம் இக்கேள்விகளை ஒன்றிய அலுவல் மொழிகள் துறைக்கு அனுப்பியிருந்தது. அந்த துறையினர் தந்த  பதிலில், ‘‘இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஒன்றிய அலுவல் மொழிகள் துறை சார்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தகவல் தரும் அதிகாரி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்த தண்டனையும் கிடையாது. அலுவல் மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்கு பொருந்தாது’’’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  பாண்டியராஜா கூறுகையில் ‘‘தகவல் அறியும் உரிமை சட்ட நடைமுறைகளில் இந்தி திணிக்கப்படுவதை  தடுக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்’’ என்றார்.


Tags : India ,Union Official Languages Department ,RTI , India alone does not have a national language: Union Official Languages Department answer to RTI question
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!