×

இங்கிலாந்தில் உள்ள ரிஷப்புக்கு கொரோனா

டர்ஹாம்: இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்க்கு டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்படுள்ளதால் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி  கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடியது. அந்த ஆட்டம் ஜூன் 23ம் தேதி முடிந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடர் ஆக.4ம் தேதி தொடங்க உள்ளது. இடையில் சுமார் ஒன்றரை மாதங்கள் வீரர்களும், அவர்களுடன் சென்ற குடும்பத்தினரும் ‘கண்காணிப்பு வளையத்தில்’ தொடர வேண்டிய சூழல். அதனால் வீரர்கள் 20 நாட்களும் இங்கிலாந்தில் விரும்பும் இடங்களுக்கு சொந்த செலவில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதற்கேற்ப இங்கிலாந்தில் கொரோனா கெடுபிடிகள் அறவே அகற்றப்பட்டன. கூடவே இங்கிலாந்தில் யூரோ கோப்பை கால்பந்து, விம்பிள்டன் போட்டிகள் நடக்கவே அதையும் வீரர்கள் உற்சாகமோக போய் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில் கவுன்டி சாம்பியன்ஷிப் லெவன் அணிக்கு எதிரான 3நாட்கள் பயிற்சி டெஸ்ட் ஆட்டம் ஜூலை 20ம் தேதி டர்ஹாமில் தொடங்குகிறது. அதற்காக இந்திய வீரர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. முதல் சுற்று சோதனை ஜூலை 10ம் தேதியும், 2வது சுற்று சோதனை நேற்று முன்தினமும் நடந்தன. முதல் சுற்று சோதனையிலேயே  விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்(23) உட்பட 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் 2வது சோதனையில் ரிஷப்புக்கு மட்டும் மீண்டும் தொற்று உறுதியானது.  கடந்த  5நாட்களாக ரிஷப் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளார். ‘அவருக்கு தொற்று இருந்தாலும் அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. ரிஷப் நலமுடன் இருக்கிறார். ஆனாலும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ரிஷபை தவிர்த்து மற்ற வீரர்கள் டர்ஹாம் புறப்பட்டுச் செல்கின்றனர்.

* ஜெய்ஷா எச்சரிக்கை
இந்திய வீரர்களை வெளியில் சுற்ற பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. ஆனாலும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீரர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவலாக இருக்கிறது. நெரிசல் அதிகமாக உள்ள இடங்கள் குறிப்பாக யூரோ, விம்பிள்டன் அரங்குகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி  எதிர்ப்பு சக்தியை வழங்காததால் வெளியில் செல்ல வேண்டாம் ’ என்று எச்சரிக்கை செய்திருந்தார்.


Tags : Corona ,Rishabh ,England , Corona to Rishabh in England
× RELATED படம் பார்க்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: ரிஷப் ஷெட்டி உருக்கம்