×

இந்தியவுடனான மகளிர் டி20 தொடரை வென்றது இங்கிலாந்து: ஸ்மிரிதி அதிரடி வீண்

செம்ஸ்போர்ட்: டி20 தொடரின் 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து  8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரை வென்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட், தலா 3 ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது. மிதாலி ராஜ் தலைமையில் விளையாடிய டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் டி20 தொடரில் இந்திய மகளிர் அணி ஆடியது. முதல் ஆட்டத்தை 18ரன் வித்தியாசத்தில் இங்கிலாநதும், 2வது ஆட்டத்தை 8 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில் தொடர் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி டி20 ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்று களமிறங்கிய இந்தியா, 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153ரன் எடுத்தது. ஸ்மிரிதி மந்தானா70(51பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்மன் 36(26பந்து, 5பவுண்டரி, 1 சிக்சர்), ரிச்சா கோஷ் 20(13பந்து , 4 பவுண்டரி) ஆகியோர் நன்றாக விளையாடினர்.

இங்கிலாந்து தரப்பில் ஷோபி 3, கேத்ரின் 2, நடாலியா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 154ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. அந்த அணி 18.4ஒவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 154ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றிப் பெற்றது. இங்கிலாந்து அணியின் டேன்னி வியாட் ஆட்டமிழக்காமல் 89*(56பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்),  நடாலியா ஸ்வெர்  42(36பந்து, 4பவுண்டரி) ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா, ஸ்நேக ராணா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம்  இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக டேன்னி வியாட், தொடரின் சிறந்த வீராங்கனையாக நடாலியா ஸ்வெர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

* அடுத்தது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணி அடுத்து செப்.19 முதல் அக்.11வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஒரு டெஸ்ட், தலா 3 ஒருநாள், டி20 தொடர்களில்  விளையாடுகிறது.

Tags : England ,T20 ,India , England wins women's T20 series against India: Smriti Action in vain
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்