×

வெ.இண்டீசுக்கு எதிரான டி20 ஆஸிக்கு முதல் வெற்றி

செயின்ட் லூசியா: வெ.இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை இழந்த ஆஸ்திரேலியா 4வது ஆட்டத்தில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் தோற்றதால் ஆஸ்திரேலிய தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் செயின்ட் லூசியாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் களம் கண்ட ஆஸி 20ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 189ரன் எடுத்தது. ஆஸி தரப்பில் மிட்செல் மார்ஷ் 75(44பந்து, 4பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 53(37பந்து, 5பவுண்டரி, 3சிக்சர்) ரன் விளாசினார். வெ.இண்டீஸ் தரப்பில்  ஹைடன் வால்ஷ் 3 விக்கெட் அள்ளினார். அதன் பிறகு 190 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சிம்மோன்ஸ் 72(48பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), லிவீஸ் 31(14பந்து, 4பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நல்ல தொடக்கம் தந்தனர்.  

கிறிஸ் கேல் 1, பிளெட்சர் 6, கேப்டன் பூரன் 16 ரன் என ஏமாற்றினர். ஆனால் அதிரடியாக விளையாடிய பேபியன் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 29ரன் விளாசி 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து 11ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரை ரஸ்ஸல் எதிர்கொண்டார். அந்த இலக்கு ரஸ்ஸலுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என்று நினைத்தனர். ஆனால் மிட்செல் ஸ்டார்க்  வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. அடுத்த 2 பந்துகளில் ரஸ்ஸல் முறையே 2, 4 ரன் எடுக்க வெ.இண்டீஸ் 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185ரன் மட்டுமே எடுத்தது. அதனால் ஆஸி 4ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாக  தேர்வு செய்யப்பட்டார். இந்த 2 அணிகளும் மோதம் கடைசி டி20 ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை நடக்கும்.

Tags : T20 ,Aussies ,West Indies , First win for T20 Aussies against West Indies
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...