டொமினிக்காவில் ஜாமீன் ஆன்டிகுவாவுக்கு பறந்தார் சோக்சி: நாடு கடத்துவதில் மீண்டும் சிக்கல்

புதுடெல்லி: டொமினிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மெகுல் சோக்சிக்கு ஆன்டிகுவா திரும்பினார். பஞ்சாப் நேஷனல்  வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பினர். நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கை, இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்ற சோக்சி, அந்நாட்டின் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த  மே மாதம் டொமினிக்காவுக்கு படகில் சட்ட விரோதமாக சென்றதால், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்காக சென்ற சிபிஐ குழு, நீதிமன்ற நடவடிக்கை தாமதத்தால் திரும்பி வந்து விட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டொமினிக்கா உயர் நீதிமன்றத்தில் சோக்சி ஜாமீன் மனு தாக்கல்  செய்தார். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும்  மூளையில் ரத்தம் உறைந்துள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்கும்படி அவர் தெரிவித்தார். அதற்கான மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்தார். இதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த 51 நாட்களாக சிறையில் இருந்த அவர், ஆன்டிகுவாவுக்கு தனி விமானத்தில் திரும்பி சென்றார். இதனால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>