நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளதாக தகவல்

டெல்லி: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியில் மம்தாவின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் மம்தா பானர்ஜி வரும் 25ம் தேதி டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்காள தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

மம்தா பானர்ஜியின் இந்த சுற்றுப்பயணம் 4 நாட்கள் வரை நீடிக்கலாம் என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொரோனா தொற்றுநோயை கையாளுதல் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து,  தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும், தேசிய தலைவர்களை சந்தித்து வருகிறார். சரத் பவாரை இரண்டுமுறை சந்தித்து பேசினார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சமீபத்தில் சந்தித்தார். இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

More
>