3வது அலையை சமாளிக்க சென்னை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவை விரைவில் பயன்பாட்டுக்கும் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்: தமிழகத்தில் 3-வது அலையை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் 3-வது அலை வந்தால், அதனை சமாளிக்கவும் தயராக உள்ளது. அதன்படி மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் தினமும் சராசரியாக 8 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அங்கு தினசரி 5 டன் உற்பத்தியாகும் வகையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலமாக அங்கு ஆக்சிஜன் தேவை, மருத்துவமனை வளாகத்திலேயே பூர்த்தி செய்யப்படும். இந்த கட்டமைப்புக்கு பராமரிப்பு செலவு மற்றும் மின்சார செலவு அதிகரிக்கும். ஆனால் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்து பல உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் 3-வது அலைக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை பெற முடியும்.

அந்தவகையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 உற்பத்தி மையங்களில் 5 டன் ஆக்சிஜனும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 உற்பத்தி மையங்களில் 5.2 டன் ஆக்சிஜனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 உற்பத்தி மையங்களில் 4.8 டன் ஆக்சிஜனும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒரு உற்பத்தி மையத்தில் 1 டன் ஆக்சிஜனும், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் ஒரு உற்பத்தி மையத்தில் 1 டன் ஆக்சிஜனும் தினசரி உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>