×

கொரோனா பாதிப்பில் இருந்து டெல்லி மீள்கிறது: 472 பகுதிகளில் மட்டுமே தடை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து தலைநகர் டெல்லி மீண்டு வருகிறது. கொரோனா உச்சத்தில் இருந்த போது டெல்லிக்கு உட்பட்ட 11 மாவட்டங்களில்  58 ஆயிரம் பகுதிகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டிருந்தன. இன்றைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 472 பகுதிகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் மட்டுமே புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 71 பேர் நேற்று முற்றிலுமாக குணமடைந்துள்ளனர். தற்போது 688 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 215 பேர் தங்களது வீடுகளிலேயே தனிமையில் உள்ளனர்.

கடந்த 2020 ஜூலை 8ம் தேதி டெல்லி மாநிலம் முழுவதும் 448 பகுதிகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் இந்த எண்ணிக்கை எகிறத் துவங்கியது. கடந்த 2020 டிசம்பரில் 58 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதிகள் கொரோனா ‘ஹாட் ஸ்பாட்களாக’ கண்டறிந்து தடை செய்யப்பட்டிருந்தன. பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் கொரோனாவின் 2ம் அலை துவங்கியது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால், தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வந்தது.

டெல்லியில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஒன்றிய அரசு தடுப்பூசி வழங்குவதை நிறுத்தினாலும், மாநில முதல்வர் கெஜ்ரிவால் போராடி, தடுப்பூசிகளை தேவையான எண்ணிக்கையில் பெற்று வருகிறார். இருப்பினும் கடந்த வாரம் கூட டெல்லியில் தட்டுப்பாடு காரணமாக 2 நாட்கள் மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. தற்போது தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதை காண முடிகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது.

Tags : Telly , Corona, Delhi
× RELATED டெல்லி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்