×

கர்நாடகாவில் கொரோனா தொற்றினால் பலியான விவசாயிகளின் வேளாண் கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு

பெங்களூரு: கொரோனா தொற்றினால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக கர்நாடக கூட்டுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியானோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து கொரோனா தொற்றினால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடனையும் தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் 2020-21ஆம் நிதியாண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.17,108 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்தின் நிதி சுமையை குறைக்கும் வகையில் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் எடியூரப்பா ஓரிரு தினங்களில் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

Tags : Karnataka , corona
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!