வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை ஆர்.என்.பாளையத்தில் மாடி வீட்டின் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது: அதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர் தப்பினர்

வேலூர்: வேலூரில் நேற்று பெய்த மழையால் மாடி வீட்டின் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர் தப்பினர்.வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்தது. வேலூர் ஆர்.என்.பாளையம் மரியம் தெருவில் அம்ரீன்நிஷா என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டின் மேல் பகுதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. உரிமையாளர் சென்னையில் உள்ளார். வீட்டை வாடகை விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை பெய்த மழையால் மாடி வீட்டின் முன்பகுதியில் உள்ள சுவர் இடிந்து பயங்கர சத்தத்துடன் சாலையில் விழுந்தது. மின்சார ஒயரும் துண்டிக்கப்பட்டு விழுந்தது.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சாலையின் வழியாக சதுப்பேரி, ஆர்.என்.பாளையம், கஸ்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். நேற்று மாலை மழை பெய்ததால் பொதுமக்கள் நடமாட்டமின்றி இருந்தது. இதனால் சுவர் இடிந்து விழுந்தபோது அங்கு யாரும் இல்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் இடிந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். வீட்டின் சுவர் இடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

Related Stories:

>