விமானங்கள் பறக்க தடையாக கட்டிடங்கள் உள்ளதா? வேலூர் விமான நிலையத்தை ஆய்வு செய்ய சென்னை சிறப்பு குழு அடுத்த வாரம் வருகை

வேலூர்: வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பறக்க தடையாக கட்டிடங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து அடுத்த வாரம் சிறப்பு குழுவினர் வருகை புரிய உள்ளனர்.வேலூர் விமான நிலையத்தை பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மொத்தம் உள்ள 120 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக 32.52 கோடியில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.அதற்காக வேலூர் விமான நிலையத்தில் டெர்மினல் பில்டிங், 800 மீட்டர் ரன்வே, வாகன நிறுத்தும் இடம், விமான நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், மின்சார கட்டிட பணிகள் என்று விமான நிலைய பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வேயை விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக விமான நிலையத்தை சுற்றி 1.15 கோடியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது விமான நிலையத்திற்கு கூடுதலாக மேலும் 10 ஏக்கர் தனியார் இடத்தை வாங்குவதற்கு நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மதிப்பீட்டு நிதி தொடர்பான அறிக்கை அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் விமான நிலையத்தை சுற்றிலும், குறிப்பிட்ட தூரத்திற்கு, விமானங்கள் பறப்பதற்கு தடையாக என்னென்ன கட்டிடங்கள் உள்ளது. அரசு கட்டிடங்களா? தனியார் கட்டிடங்களா? தனியார் கட்டிடங்களாக இருந்தால் அதற்கு பட்டா உள்ளதா? புறம்போக்கு இடமா? மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்து கணக்கெடுக்க சென்னையில் இருந்து விமான நிலைய நிர்வாகம் சார்பில் சிறப்பு குழுவினர் அடுத்த வாரம் தொடக்கத்தில் வேலூர் வர உள்ளனர். அந்த குழுவினர் ஆய்வு செய்து, அறிக்கை அளித்த பின்னர், விமானங்கள் பறக்க தடையாக உள்ள கட்டிடங்கள் அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>