×

திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தையை திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை.

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. சிறு, குறு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு சென்று இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, அரசு நிர்ணயித்த விலையில், சரியான எடையில் விற்பனை செய்து வந்தனர். அதேபோல், பொதுமக்களும் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உள்ளிட்டவை தரமானவையாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதால் ஆர்வமுடன் வாங்கி பயனடைந்து வந்தனர்.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக உழவர் சந்தைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் நோய் பரவல் அதிகமாக இருந்ததால் உழவர் சந்தைகள் மூடப்பட்டன.

தற்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டு இருந்த வணிக நிறுவனங்கள், மால்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள், ஓட்டல்கள் உட்பட பல்வேறு கடைகளும், தற்போது அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து திறக்கப்பட்டுள்ளன.ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட உழவர் சந்தைகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் வழக்கமாக அங்கே கடை வைக்கும் விவசாயிகள் தற்போது தங்களது விளை பொருட்களை சாலையோரம், நடைபாதைகளில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளையும் மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvannamalai district , In Thiruvannamalai district Farmers market needs to be opened: Farmers demand.
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...