×

திருச்சி அருகே நயம் ரகத்துடன் ரேஷன் அரிசி கலந்து விற்பனை

* ரைஸ்மில் உரிமையாளர் கைது * 183 மூட்டை பறிமுதல்

திருச்சி: தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் ரேசன் பொருட்கள் அந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு சிவில்சப்ளை கார்ப்பரேசன் குடோனில் பாதுகாப்பாக வைக்கப்படும். மேலும் அந்தந்த குடோனில் இருந்து லாரிகள் மூலம் ரேசன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது, எந்த விதமான ஆவணங்கள் இன்றி ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ரேசன் அரிசியை கடத்தி அதனை ரைஸ் மில்களுக்கு கொண்டு சென்று குருணையாக மாற்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி காட்டூரில் உள்ள ரைஸ்மில்லில் சாப்பாட்டு அரிசியுடன் ரேசன் அரிசியை கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்புவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ அலாவூதீன், சிறப்பு எஸ்ஐ செல்வராசு, ஏட்டு ராஜகோபால், போலீசார் எட்வின்ஜெயபால், ராமலிங்கம், கார்த்தி ஆகியோருடன் அங்கு சென்று ரைஸ்மில்லில் சோதனை செய்தனர். சோதனையில், ஐஆர் 72 ரக அரிசியுடன் ரேசன் அரிசியை கலந்து விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 40 கிலோ எடை கொண்ட 183 மூட்டைகளில் இருந்த 7320 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மில் உரிமையாளர் மண்ணச்சநல்லூர் நொச்சியத்தை சேர்ந்த கணேஷ் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Trichy , Ration rice mixed with Nayam raga near Trichy for sale
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...