×

பூமிக்கடியில் பைப்லைன் பதித்து பெரியாற்றில் தண்ணீர் திருட்டு: 30 மோட்டார்கள் பறிமுதல்

உத்தமபாளையம்: பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பெரியாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் முதல்போக பாசனத்திற்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். நீர்ப்பிடிப்பில் பெய்த தொடர் மழையால், இந்தாண்டு நீர்வரத்து அதிகரித்து ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூர், கம்பம், சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், குச்சனூர், சின்னமனூர், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளின் வழியே முல்லை பெரியாறு செல்கிறது. இப்பகுதியில் சில இடங்களில் ஆற்றின் அருகே மோட்டார் பம்புசெட் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறையினருக்கு புகார் வந்தது.

இந்த புகாரின்படி, உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கதிரேஷ்குமார் தலைமையில், பாசன ஆய்வாளர் மலைச்சாமி, விஏஓ சதீஷ் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர் குழுவினர் நேற்று அதிரடி ேசாதனை நடத்தினர்.இதில், பூமிக்கடியில் பைப்லைன்கள் பதித்து, அதிக திறன் வாய்ந்த மோட்டார் பம்ப்செட் மூலம், சின்னமனூர், ஓடைப்பட்டி, ராயப்பன்பட்டி, எரசக்கநாயக்கனூர், சின்ன ஓவுலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு திருடப்பட்டது தெரிய வந்தது. இதனை கண்ட பொதுப்பணித்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து 30க்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப் செட்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறன்றனர்.


Tags : Periyar , Insert the pipeline underground Water theft in Periyar: 30 motors seized
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...