×

உஷார் மக்களே!: திண்டுக்கல்லில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தெரியாதவர்களை குறிவைத்து பல லட்சம் கொள்ளையடித்த நபர் கைது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டியை சேர்ந்த முதியவர் ஒமன்த் என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். 5 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொடுத்த அந்த நபர் போலியான ஏ.டி.எம். அட்டையை முதியவரிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். தொடர்ந்து, உண்மையான ஏ.டி.எம். அட்டையை கொண்டு 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் திருடி இருக்கிறார்.

இதையடுத்து தன்னிடம் உள்ளது போலி ஏ.டி.எம். அட்டை என்பதை பின்னர் அறிந்த ஒமன்த் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையை தொடங்கிய தனிப்படை போலீசார், நாகம்பட்டு ஏ.டி.எம். முன்பு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பாலா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தெரியாதவர்களை குறிவைத்து இந்த கொள்ளையை அரங்கேற்றி வந்ததை பாலா ஒப்புக்கொண்ட நிலையில், அவரை கைது செய்த போலீசார் ஒரு லட்சம் ரூபாய் பணம், 4 போலி ஏ.டி.எம். அட்டைகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இதேபோல் சென்னையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி பலகோடி ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். நீலாங்கரை போலீசார் முட்டுக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே வந்த கார் ஒன்றில் சோதனை மேற்கொண்டனர். அதில் ஏராளமான ஏ.டி.எம். அட்டைகள், ஸ்கிம்மர் கருவிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற போலீசார் 3 பேரை கைது செய்தனர். பல ஆண்டுகளாக ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டு வரும் இந்த கும்பல் பிட் காயினில் முதலீடு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : Ushar ,Dindigul , Dindigul, ATM Center, robbery, arrest
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...