கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் வடிகால் வாய்க்காலில் கடல்நீர் புகுந்து பாதிப்பு: விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறும் அபாயம்

கொள்ளிடம்: கதவணை கட்டியும் பயனில்லாமல் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி வடிகால் வாய்க்காலில் கடல்நீர் புகுந்து நிற்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வாலி ஓடை மற்றும் கழுமலையாறு வாய்க்கால்கள் ஒன்று சேர்ந்து வடிகால் வாய்க்காலாக சென்று வேட்டங்குடி அருகே கொட்டாய்மேடு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் இருந்து தண்ணீர் கடலில் கலக்கும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கதவணை ஓராண்டுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் கடலில் இருந்து 3 தொலைவுக்கு வாய்க்காலில் உப்புநீர் புகுந்துள்ளது. கடல் அருகே கதவணை கட்டியிருந்தால் கடல்நீர் உட்புகுந்திருக்காது.

எந்த நேரமும் இந்த வாய்க்காலில் உப்புநீர் தேங்கி நிற்பதால் வேட்டங்குடி, வாடி, வேம்படி, தாண்டவன்குளம், நல்லநாயகபுரம், இருவக்கொல்லை ஆகிய இடங்களில் வயல்கள் மற்றும் குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர் எளிதில் வடிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வேட்டங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறி வருவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நஞ்சை புஞ்சை விவசாய சங்கங்களின் மாவட்ட செயலாளர் வில்வநாதன் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன் வேட்டங்குடியில் உள்ள வடிகால் வாய்க்காலில் முறையாக கட்ட வேண்டிய இடத்தில் கதவணை அமைக்காமல் விதிக்கு புறம்பாக 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கதவணை கட்டப்பட்டது.இதனால் வடிகால் வாய்க்காலில் உப்புநீர் புகுந்து எந்த நேரமும் தேங்கியுள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தேங்கும் மழைநீர் விரைவில் வடிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே வேட்டங்குடி வடிகால் வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள கதவணையை இடித்து விட்டு கடலுக்கு அருகில் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

More
>