×

வருசநாடு அருகே காஸ் சிலிண்டர் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதி மறுப்பு: தலைச்சுமையாக தூக்கி செல்லும் மலைக்கிராம மக்கள்

வருசநாடு: வருசநாடு அருகே மஞ்சனூத்து மலைக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்குள்ள மலைக்கிராம மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. கடமலைக்குண்டு தனியார் ஏஜென்சி காஸ் சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறது. இந்த கிராமம் மேகமலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களாககிராமத்திற்குள் சிலிண்டர் வாகனங்களை உள்ளே அனுமதிக்க வனத்துறை தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 10 கிமீ தொலைவில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு டூவீலரில் அல்லது தலைச்சுமையாக சிலிண்டரை தூக்கி செல்லும் அவலநிலைக்கு மலைக்கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘இங்குள்ள அரசரடி, இந்திரா நகர், பொம்மராஜபுரம், மஞ்சனூத்து  உள்ளிட்ட கிராமங்களில் 400க்கு மேற்பட்ட சிலிண்டர் இணைப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இதற்கு முன் காஸ் சிலிண்டர் கொண்டு வாகனங்களை மலைக்கிராமத்திற்கு வர வனத்துறையினர் அனுமதித்தனர். ஆனால், தற்போது, சிலிண்டர் வாகனங்ளுக்கு அனுமதி தருவதில்லை. கேட்டால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதால், அனுமதி இல்லை என்கின்றனர். வனத்துறை தரும் நெருக்கடியால், 262 ேபர் மட்டு சிலிண்டரை வாங்கி பயன்படுத்துகின்றனர். அவர்களில் சிலர் டூவீலரிலும், சிலர் சிலிண்டரை தலைச் சுமையாக சுமந்தும் செல்ல வேண்டியுள்ளது. மற்றவர்கள் கோரையூத்தில் இருந்து சிலிண்டரை தூக்கி வர முடியாததால், விறகு அடுப்பிற்கு மாறிவிட்டனர். இதுகுறித்து பலமுறை மேகமலை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காஸ் சிலிண்டர் வாகனங்களையோ, பொதுமக்களையோ அனுமதிப்பதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. வனத்துறை மேலதிகாரிகள் உத்தரவிட்டால் வாகனங்கள் அனுமதிக்கப்படும்’ என்றனர்.



Tags : Forest Department ,Varusanadu , For gas cylinder vehicles near Varusanadu Denial of forest permission: Mountain villagers carrying heavy loads
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...