×

தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்தவர்; பள்ளிகளைக் கட்டி அறியாமை ஒழித்தவர் காமராஜர் : மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை: பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,2006ல் கழக ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஜூலை 15-ம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து, அரசு ஆணை வெளியிட்டது. இது எதிர்காலத்தில் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அந்த ஆணையை, சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் என்பதை இங்கு நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ” கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜரை அவர்களது பிறந்தநாளில் வணங்குகிறேன். தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த அன்னாரது நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் கல்வி என்பதை அரைநூற்றாண்டுக்கும் முன்பே நடைமுறைப்படுத்திய மாமனிதர். சமூகத்தைப் பிணித்துள்ள சாதி-மத நோய்களை அழித்தொழிக்கும் அருமருந்து கல்வி என்பதை உணர்ந்து அறியாமைப் பிணி போக்கிய அரும்பெரும் தலைவர். அணைகளைக் கட்டி பசுமை வளர்த்தார். பள்ளிகளைக் கட்டி அறியாமை ஒழித்தார்.’ என பதிவிட்டுள்ளார்.

Tags : Kamaraja ,BC ,Stalin , காமராஜர்
× RELATED மதுரை காமராஜர் பல்கலை.யில் தொலை...